உலோகப் பொருட்கள் அடங்கிய தபால்களை ஏற்க வேண்டாமென யாழ். அஞ்சல்மா அதிபர் உத்தரவு யாழ். குடாநாட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தபால்களில் குண்டூசி, கிளிப்பு போன்ற உலோகப் பொருட்கள் உள்ளடங்கிய தபால்களை அனுப்புவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதால் இத்தகைய உலோகப் பொருட்களை உள்ளடக்கிய தபால்களை மாவட்டத்தில் இயங்கும் தபாலலுவலகங்களில் பொறுப்பேற்க வேண்டாம் என யாழ். மாவட்ட அஞ்சல்மா அதிபர் என். குமரகுரு தபாலக ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இத்தகைய உலோகப் பொருட்கள் அடங்கிய கடிதங்களினால் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் இலத்திரனியல் பரிசோதனையினால் பல்வேறு பிரச்சினைகளை தபால் உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இங்கிருந்து வெளிமாவட்டத்திற்கு அனுப்பும் தபால் பொதிகள் காங்கேசன்துறைமுகத்தில் வைத்து கடற்படையினால் பரிசோதனை செய்வது வழமை. இதனால் அவர்கள் பயன்படுத்தும் இலத்திரனியல் கருவிகளினால் சிலவேளைகளில் கடிதங்கள் உடைக்கப்பட வேண்டியுள்ளது. அல்லது அவைகள் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்ப வேண்டியுள்ளது. இதனால் சிலவேளைகளில் ஏனையவர்களின் தபால்களும் செல்லாமல் திரும்பி வரும் சூழ்நிலையினால் தான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அஞ்சல் அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ். குடாநாட்டில் தபால் சேவைகள் சுமுகமான முறையில் இடம்பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





