`கறைபடிந்த வரலாற்றை உருவாக்க வேண்டாம் கடத்தப்பட்ட துணைவேந்தரை விடுவியுங்கள்' கடத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை உடனடியாக விடுவிக்குமாறும் அவரது உயிருக்கு ஏதாவது தீங்கை ஏற்படுத்தி கறைபடிந்த வரலாற்றை உருவாக்க வேண்டாம் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடர்பாகவோ அல்லது அவரது கடத்தல் தொடர்பாகவோ இதுவரை எந்தவிதமான உருப்படியான, திருப்தியான பதில்கள் கிடைக்கப்பெறாமை மிகவும் வருத்தத்திற்குரியது. தற்போது பதவியில் உள்ள அரசு காலத்திலேயே வடக்கு, கிழக்கு சார் கல்விச் சமூகம் மீதான வன்முறைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. கல்வியாளர்களுக்கான அச்சுறுத்தல்களும் கடத்தல்களும் நாட்டின் அபிவிருத்தி தகைமை நிலையையே மேலும் பாதிப்படையச் செய்யும் என்பதோடு தமிழ்க் கல்விமான்கள் மற்றும் மாணவர்கள் மீது பிரயோகிக்க முனையும் வன்முறைகள் அவர்கள் ஐக்கிய இலங்கைத் தீர்வுக்கான தமது சிந்தனைத் தளத்திலிருந்து மென்மேலும் விலகவே வழி சமைக்கும். மூடப்பட்ட நிலையில் உள்ள எமது பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகளை உடனடியாக மீள ஆரம்பிப்பதற்கான புறச்சூழ்நிலைகளைத் தோற்றுவிப்பதோடு, கடத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தரையும் உடனடியாக விடுவிக்கும் படியும் அவரது உயிருக்கு ஏதாவது தீங்கை ஏற்படுத்திக் கறை படிந்த வரலாற்றை உருவாக்க முயல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்வதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





