புதிய வெளிவிவாகரத்துறைச் செயலாளர் நியமனம்: மகிந்த - மங்கள முறுகல் புதிய வெளிவிவகாரத்துறைச் செயலாளரை நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பதவிக்கு இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவரான ரொமேஷ் ஜயசிங்கவின் பெயரை மங்கள சமரவீர கடந்த வாரம் மகிந்தவிடம் பரிந்துரை செய்திருந்தார். எனினும் ஜயசிங்கவை அப்பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் மகிந்த தெரிவித்ததே முறுகலுக்கான காரணம் என தெரியவருகிறது. தற்போது வெளிவிவகாரத்துறைச் செயலாளராக பணியாற்றும் பாலிகக்ஹாரவின் பதவிக்காலம் எதிர்வரும் 31 ஆம் நாளுடன் முடிவடைகின்றது. வெளிவிவகாரத்துறை அமைச்சில் ஏற்பட்ட அழுத்தங்களால் மேலதிக பதவி நீடிப்பை பாலிகக்ஹார விரும்பவில்லை எனத் தெரிகின்றது. மங்களவின் பரிந்துரையை மகிந்த ஏற்கவில்லை எனில் சுதந்திரக் கட்சியில் இருந்து மிக முக்கிய உறுப்பினரின் விலகலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மங்களவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகிந்தவின் இணைப்புச் செயலாளராக பணியாற்றும் வாஸ் குணவர்த்தனவின் ஆலோசனையின் பேரில் பல சந்தர்ப்பங்களில் வெளிவிவகாரத்துறை அதிகாரிகளை மங்களவிற்கு தெரியாமல் மகிந்த நேரடியாக தொடர்பு கொண்டது மங்களவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. மகிந்தவின் முதலாவது இந்தியப் பயணத்திற்கு முன்னர் இந்தியாவிற்கு சென்ற வாஸ் குணவர்த்தனாவை ரொமேஷ் ஜயசிங்க உரிய மரியாதையுடன் வரவேற்கவில்லை என்று குணவர்த்தன மகிந்தவிடம் முறையிட்டிருந்ததும் அது தொடர்பாக மகிந்த வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விளக்கம் கோரியிருந்தார். புதினம்.கொம்.





