Thursday, December 21, 2006

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க...

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்: சென்னையில் த.தே.கூ. வேண்டுகோள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சென்னையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியுடனான சந்திப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஊடகவியலாளர் மாநாடு சென்னையில் இன்று புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசிய போது ஈழத் தமிழ் மக்கள் படும் துயரங்களை விவரித்தனர். அதனை பரிவோடு கேட்டுக்கொண்ட முதல்வர், இந்திய அரசாங்கத்திடம் இது விடயமாக பேசுவதாகக் கூறினார். உங்களின் உள்ளக் குமுறலை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன். என்னால் சட்டங்களுக்குட்பட்டு இயன்ற அத்தனையையும் செய்கிறேன் என்றும் முதல்வர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும் முழுமையாக உடனிருந்தார் என்றார் சுப.வீரபாண்டியன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் உள்ள 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் உள்ளடங்கிய குழுவினர் தமிழகத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வருகை தந்தோம். நாங்கள் முன்னர் பலமுறை இந்திய நாட்டுக்கு வந்திருக்கிறோம். மத்திய அரசாங்கம் வரை சென்று பல விடயங்கள் பேசியுள்ளோம். இலங்கையில் தமிழர் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களின் துன்பங்களை தமிழக முதல்வரிடம் எடுத்துச் சொல்ல விரும்பினோம். அதனை முதல்வருக்கு நாம் தெரிவித்த போது அதற்குரிய வாய்ப்பை எமக்கு இன்று முதல்வர் அளித்தார். முதல்வர் இல்லத்தில் இன்றைய சந்திப்பு நடைபெற்றது. தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளோம். தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டமானது இலங்கையில் அமைதி வழிப் போராட்டமாக 50 ஆண்டு காலத்துக்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தினால் அந்த அமைதி வழிப் போராட்டத்தை ஆயுதமுனையில் அடக்க முயற்சித்தனர். இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. 1983 ஒகஸ்ட் 16 ஆம் நாள் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா அம்மையார், இந்திய நாடாளுமன்றத்தில் "இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுவதாக" கண்டனம் தெரிவித்தார். இலங்கையில் பாரம்பரியமாக வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் மீது மிகப் பயங்கரமான முறையில் ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாகரை, கதிரவெளி பிரதேசங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் 6 இலட்சம் மக்களும் உணவின்றி மருத்துவ வசதியின்றி அகதிகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் ரூ. 5 முதல் 8 வரை விற்பனையாகும் 1 முட்டையானது யாழ்ப்பாணத்தில் ரூ. 60 முதல் 70 வரை விற்கப்படுகிறது. ரூ. 1 கொடுத்து ஒரு பொருளை வாங்கக்கூட மக்களுக்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு 1 இலட்சம் 25 ஆயிரம் டீசல் நாளொன்றுக்கு தேவை. இதனை தொடர்ந்து கடல் மூலம் அனுப்பி வைக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் மீன்பிடித்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மக்களுக்கான தேவையான பொருட்களை அனுப்பி வைக்காமல் இத்தனை தொன் அனுப்பினோம் அத்தனை தொன் அனுப்பினோம் என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கூறி வருகிறது. யாழ்ப்பாணத்துக்கான ஏ-9 தரைவழிப் பாதையை சிறிலங்கா அரசாங்கமானது மூடி வைத்திருப்பதால் பட்டினிச் சாவுக்கு அந்த மக்கள் ஆளாகும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகிந்த ராஜபக்சவை எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பலமுறை நேரில் வலியுறுத்தினோம். வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ஆகியோரிடமும் நாம் வலியுறுத்தினோம். அவர்களும் வேண்டுகோள் விடுத்தும் பாதை திறக்கப்படவில்லை. அதனால் மக்களுக்கு போதிய உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கைகளத் தீவிரப்படுத்தியுள்ளது. நாளாந்தம் 30 முதல் 50 பேர் வரையில் படுகொலை செய்யப்படுகின்றனர். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்துக்கு கடலில் ஏற்படும் உயிராபத்துகளை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு தேடி வந்துள்ளனர். இதுவரை உள்நாட்டிலேயே 2.5 இலட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். தமிழ் மக்களுக்கு கொஞ்சம் கூட சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வழங்க முடியாது. சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் பாதுகாப்புக்காக தமிழகத்துக்கும் வெளிநாடுகளுக்கும் அகதிகளாக தமிழ் மக்கள் ஓடுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 பெப்ரவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் செய்து கொண்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கவே அரசாங்கம் செயற்படுகிறது. இந்த 4 வருட போர் நிறுத்த ஒப்பந்தகாலத்தில் எந்த ஒரு சிறு உதவியும் கூட தமிழ் மக்களுக்குக் கிடைக்கவே இல்லை. தமிழ் மக்களுக்கான இடைக்கால நிர்வாக அமைப்பும் கூட உருவாக்கப்படவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்கானது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம். இந்தியாவிலே சீக்கியர்களுக்கும் மலையாளிகளுக்கும் எப்படி பஞ்சாப்பும் கேரளமும் தாயகமோ அதுபோல் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணமானது எமது தாயகம். அங்கே சிறிலங்காவின் சுதந்திரத்துக்கு முன்பாக சிங்களவர் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் குடியேற்றத்தால் இப்போது எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் உள்ள திருகோணமலையிலிருந்து முற்று முழுதாக தமிழ் மக்களை வெளியேற்றும் வகையிலேயே சிறிலங்கா இராணுவம் செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களை முற்றாக திருகோணமலையிலிருந்து வெளியேற்றி விட்டு அதன் பின்னர் அப்பிரதேசத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறையிலும் தமிழர்களை வெளியேற்றி பௌத்த சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளையே சிறிலங்கா மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளோரில் பெரும்பாலானோர் திருகோணமலையைச் சேர்ந்த தமிழர்கள்தான். இந்திய-இலங்கை உடன்பாட்டின் கீழ் தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு ஒரே மாகாணமாக- ஒரே அலகாக உருவாக்கப்பட்டது. கடந்த 18 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்ததை 100 விழுக்காடு சிங்களவர்களே உள்ள சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அண்மையில் வடக்கு - கிழக்கு இணைப்பு முறை செல்லாது என்று அறிவித்துவிட்டது. முன்னர் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டபோது பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்தன. ஆனால் பொதுக்கட்டமைப்பும் சட்டவிரோதமானது என்று இதே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறிலங்காவின் நீதிமன்றமானது சிங்களவர்களுக்கானது. இந்திய - இலங்கை ஒப்பந்தமானது ஒரு சர்வதேச உடன்படிக்கை. ஆனால் சிறிலங்காவோ எந்த ஒரு உடன்பாட்டையுமே செயற்படுத்தவில்லை. நாங்கள் கடந்த முறை இந்திய மத்திய அரசாங்கத்தினரை சந்தித்த போது இது விடயமாக விவாதித்தோம். வடக்கு - கிழக்கைப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய அரசு தெரிவித்தது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் விருப்பத்தையும் சிறிலங்கா அரசாங்கம் இன்றுவரை நிறைவேற்றவில்லை. வடக்கு - கிழக்கு மாகாண இணைப்புக்கான சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தாக்கல் செய்தால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிப்பதாக அறிவித்தது. நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரிப்பதாகக் கூறினோம். ஆனால் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆயத்தமாக இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழினப் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கில் தமிழர் தாயகப் பகுதியில் நாளாந்தம் படுகொலைகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் நாளைக்கு 50 பேர் காணாமல் போகும் நிலைமை உருவாகி உள்ளது. அண்மையில் 30 இளைஞர்கள் மனித உரிமைகள் ஆணையத்திடம் தஞ்சமடைந்து பாதுகாப்புக்காக சிறைகளிலே வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும் நேரத்தில்தான் படுகொலைச் செயல்கள் நடத்தப்படுகின்றன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது இராணுவம் மற்றும் துணைப் படையினரே நடமாடுகின்றனர். ஒரு கொலைக் கலாச்சாரத்தை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த ஓராண்டில் எமது கூட்டமைப்பின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் இராணுவத்தாலும் அவர்களுடன் இணைந்துள்ள துணைப்படையினராலும் படுகொலை செய்யப்படுகின்றனர். ஆனால் இந்தப் படுகொலை தொடர்பில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. தமிழ் மக்களை படுகொலை செய்து கொண்டே மறுபக்கத்திலே பேச்சுவார்த்தை தயார் என்று கூறி சர்வதேச நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முட்டாளாக்குகிறது. தமிழர் தாயகத்தை பிளவுபடுத்தி வடக்கு - கிழக்கு மக்களை பிளவுபடுத்தி தமிழர் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தவே சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகிறது. எமது தாயகமான இலங்கையின் வடக்கு - கிழக்கில் நாம் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களுக்கு எதனையுமே வழங்காத நிலையில் நாங்கள் தொடர்ந்தும் பேசுவதில் பயனில்லை. சிறிலங்கா அரசாங்கத்தில் கடும் போக்காளர்களே உள்ளனர். மகிந்த ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச மிகக் கடும் போக்காளர். ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவை சிங்கள தீவிரவாத இயக்கங்கள். தமிழ் மக்களை அழித்தொழிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் அடாவடித்தனங்களுக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து முழு இலங்கையையும் பௌத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டும் என்ற ஒரே இலக்கோடு மட்டுமே சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகிறது. இலங்கையில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச சமூக நாடுகளுக்கும் நாம் எடுத்துக் கூறினோம். ஆனால் அந்நாடுகள் கைவிரித்து விட்டன. ஆகையால் இயல்பாகவே யார் எங்களுக்கு தஞ்சம் அளிக்க வேண்டுமோ யார் எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமோ அந்த இந்தியாவுக்கு நாம் மீண்டும் வந்துள்ளோம். தற்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழக முதல்வரான- உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து எங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க- எங்கள் மக்கள் சாவிலிருந்து தப்பித்து உயிர் வாழ நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். தமிழ் மக்களைப் பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டோம். அவர் பேசுவதாகக் கூறியுள்ளார். இந்திய அரசாங்கமானது வெற்று அறிக்கைகளோடு நிற்காகமல், வழமையான அறிக்கைகள் போல் இல்லாமல் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சம பிரஜைகளாக நடத்தப்படா விட்டால் சிறிலங்காவின் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் பாதிப்புக்குள்ளாகும் என்கிற வகையிலான அழுத்தம் அளிக்க வேண்டும். தமிழ் மக்களைப் பாதுகாக்கின்ற வகையிலான அழுத்தங்களை சர்வதேச நாடுகளுடன் ஆலோசித்து செயற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இன்று தமிழக முதல்வரைச் சந்தித்த போல் எதிர்வரும் நாட்களில் தமிழக மற்றும் இந்தியத் தலைவர்களையும் இந்திய அரசாங்க அதிகாரிகளையும் நாம் சந்திக்க உள்ளோம். இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் வரலாற்று ரீதியாக- இனம், மொழி மற்றும் கலாச்சார ரீதியாக ஆழமான உறவு உண்டு. நாம் படுகொலை செய்யப்படுகிற போது நீங்கள் வெறுமனே பார்வையாளராக இருக்க முடியாது. தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா தனது பகிரங்கமாகவும் உறுதியாகவும் தனது நிலைப்பாட்டைச் சொன்னால்தான் தற்போதைய அவல நிலைமை மாறும். இந்தியாவால் எதனையும் செய்ய முடியும். இலங்கையில் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் தமிழர்களே ஆட்சி செய்கிற உரிமையோடு இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த மண்ணில் வலியுறுத்தவே நாம் வந்துள்ளோம். 1977 ஆம் ஆண்டு சுதந்திரத் தமிழீழத்தை அமைக்க தமிழ் மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளித்தனர். அந்த இலட்சியத்தை நோக்கியே தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்டு வருகின்றனர். ஆகவே எமது விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் தமிழக மக்களும் தமிழக அரசாங்கமும் அங்கீகரிக்க வேண்டும் என்று நாங்கள் கோருவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.