Tuesday, December 26, 2006

யாழ். மோதல்களில் 9 பேர் பலி- 9 பேர் படுகாயம்

யாழ். மோதல்களில் 9 பேர் பலி- 9 பேர் படுகாயம் யாழ். குடாநாட்டில் குடமியன் பகுதியில் ரோந்து சென்ற சிறிலங்காப் படையினரை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நாவாந்துறை காக்கைதீவுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 9 இராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இவர்களில் இருவரின் நிலை கவலைக்கு இடமான நிலையில் உள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காக்கைதீவுப் பகுதியில் கைப்பற்றப்பட்ட 5 சடலங்களை இன்று மதியம் இராணுவத்தரப்பு யாழ். போதனா மருத்துவமனையில் கையளித்ததாகவம் பின்னர் மதியம் 1 மணியளவில் நாவாந்துறைக்கு அருகாமையில் உள்ள ஆனைக்கோட்டைப் பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மேலும் ஒரு சடலத்தை சிறிலங்கா காவல்துறையினர் ஒப்படைத்ததாகவும் யாழ். போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. படுகாயமடைந்த இரு இராணுவத்ததினர் நேற்றிரவு யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இன்று காலை மேலும் 4 இராணுவத்தினர் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் இவர்கள் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோதலை அடுத்து காக்கைதீவுப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.