வாகரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கப் படையினர் தடை. வாகரைக்கு நேற்றைய தினம் எடுத்துச் செல்லப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க களஞ்சிய அறையிலும், அரசாங்க செயலக களஞ்சிய அறையிலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளால் பார ஊர்திகளில் எடுத்துச் செல்லப்பட்ட அத்தியவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய சிறீலங்காப் படையினர் கால அவகாசம் வழங்க மறுத்ததை அடுத்தும், குறிப்பிட்ட நேரத்தினுள் அனைத்து அதிகாரிகளும் மட்டக்களப்பு திரும்பவேண்டும் என படையினர் வலியுறுத்தியதை அடுத்தும் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்க முடியாமல் அனைத்து பொருட்களும் செஞ்சிலுவைச் சங்கம், அரசாங்க செயலக களஞ்சியறையில் இறக்கிவிட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினர் அவசர அவசரமாக திரும்பியுள்ளனர். தற்பொழுது வாகரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு விநியோகிக்க படையினர் தடைவிதித்து வருகின்றனர் என திருமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.இன்று அத்தியவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்ச் சென்ற அதிகாரிகள் படையினரால் மிரட்டப்பட்ட திருப்பி அனுப்பப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.





