ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிறீலங்கா அரசால் தரைமட்டம். கனரக ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவத் தாங்கிகள் உதவியுடன், இந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் கடந்த நவம்பர் 25 ஆம் நாள் நுழைந்த இராணுவத்தினர், மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஈன இரக்கமற்ற தாக்குதலை உறுதிப்படுத்திய திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், நாகரிகமடைந்துள்ள தற்போதைய உலகில், எந்த நாட்டின் இராணுவமும் இத்தகைய கேவலமான செயலில் ஈடுபடாது என்றும் தெரிவித்தார். மாவீரர் நாள் கடைப்பிடிப்பிற்கு இரு நாட்களே இருந்த நிலையில், திட்டமிட்டு மாவீரர் துயிலுமில்லங்களை புல்டோசர் பாவித்து உடைத்து அழித்துள்ளதாக அவர் கூறினார்.சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல்களாலும், சம்பூர் நில ஆக்கிரமிப்பினாலும் அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து வாகரை நோக்கிச் சென்றுள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் மிகப்பெரிய மாவீரர் துயிலுமில்லத்தை இவ்வாறு நாகரீகமின்றி சிதைத்திருப்பது கேவலமானது என்றும் அவர் தெரிவித்தார். 1986 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினருடான யுத்தத்தின் போது களப்பலியான மேஜர் கணேசின் வித்துடல் தொடக்கம், அண்மையில் களப்பலியான லெப். கேணல் குஞ்சன் வரை, ஏராளமான மாவீரர்களின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட புனித பூமியை, திட்டமிட்டு இராணுவத்தினர் அழித்துள்ளனர். 1995 இல் இதுபோன்று, கோப்பாய், கொடிகாமம் மற்றும் வடமராட்சியில் எல்லங்குளம் போன்ற பகுதிகளில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லங்களையும் சிறிலங்கா இராணுவுத்தினர் அழித்தனர். இருப்பினும், 2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர், இவை மீளவும் புனரமைக்கப்பட்டன.





