Thursday, November 30, 2006

பொது இடங்களில் புகைத்தல், மது பாவனைக்கு நாடு...

பொது இடங்களில் புகைத்தல், மது பாவனைக்கு நாடு பூராகவும் நாளை முதல் கடுமையான தடை [30 - November - 2006] பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் நாளை முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இத்தடை உத்தரவை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் தடை செய்யப்படும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் ஐயாயிரம் ரூபா தண்டமும் அறவிட புகையிலை மற்றும் மதுபானம் சம்பந்தப்பட்ட தேசிய அதிகார சபை நடவடிக்கை எடுக்கவுள்ளது. புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த அதிகார சபை தனது சட்ட யாப்பு பரிந்துரைகளுக்கு அமைய புகையிலை உற்பத்தி, மதுபான பாவனை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக புகைத்தல் பொருட்கள் மற்றும் மதுபான வகைகள் தொடர்பாக ஊடக பிரசாரங்கள் முழுமையான தடைக்கு உட்படுகிறது. எவரேனும் தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின் இரண்டு வருட சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாவும் அபராதமாக அறவிடப்படும். புகையிலை மற்றும் மதுசாரம் ஆகிய தயாரிப்புகளை பாவனைக்கு எடுப்பதினால் இலங்கையர்களின் உடல்நலம் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன் மரணிக்கும் வீதமும் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது ஆய்வு புள்ளி விபரங்கள் ஊடாக தெரிய வந்துள்ளது. இவற்றால் நோய்க்குள்ளாவோரின் சுகாதார செலவீனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேட்டை தடுக்கவும் வீண் விரயங்களைக் கட்டுப்படுத்தவும் குறிப்பிட்ட இந்தத் தடை உத்தரவு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டு சட்ட மூலமாக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதாக அதிகார சபையின் சார்பாக தகவல் தந்த அதிகாரி தெரிவித்தார். பாராளுமன்றத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமூலம் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. வீதிகள், பஸ் மற்றும் புகையிரதங்கள், அவற்றின் நிலையங்கள், சந்தைகள், அலுவலகங்கள், சினிமா தியேட்டர்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், விமான நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள் மற்றும் சன நடமாட்டம் நிறைந்த பொது இடங்கள் பட்டியலுக்குள் அடக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பொது இடங்களில் கடைகளில் வைக்கப்பட்டுள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் தொடர்பான விளம்பரங்களும் உடனடியாக அகற்ற கோரப்பட்டுள்ளது.