Wednesday, November 29, 2006

புலனாய்வுத் தகவல்களை பின்னரே தூதுவர்களையும்...

புலனாய்வுத் தகவல்களை பின்னரே தூதுவர்களையும் நாட்டுக்குள் அனுமதிப்போம் - சிறிலங்கா அரசாங்கம். ஆயுத பிணக்குகளில் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் அலன் றொக் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்பட்டமையினால் இனிமேல் இத்தகையவர்கள் சிறிலங்கா வரும் முன்னர் அவர்கள் குறித்து புலனாய்வுத்தகவல்களை பெறவுள்ளோம். இதன் பின்னரே நாட்டுக்குள் அவர்களை அனுமதிப்பது குறித்து தீர்மானிப்போம் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, இவ்வாறு இங்கு வரும் தூதுவர்களை ஜனாதிபதி நேரடியாக இனிமேல் சந்திக்கமாட்டார். ஆயுதப்பிணக்குகளில் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய ஐ.நா. சபையினால் நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கான திருமதி ராதிகா குமாரசாமியின் விசேட தூதுவராகவே அலன் றொக் சிறிலங்கா வந்தார். இவ்வாறு தூதுவர்களின் தூதுவர்களாக வருபவர்களுடன் இனிவரும் காலங்களில் ஜனாதிபதி நேரடிச் சந்திப்புகளை மேற்கொள்ளமாட்டார். இவ்வாறான ஆராய்வுகளின் தலைமை அதிகாரிகளை மட்டுமே ஜனாதிபதி சந்திப்பார். இவ்வாறான தூதுவர்களின் பின்புலம் தொடர்பாக முழுமையான புலனாய்வு அறிக்கைகளை சிறி லங்கா அரசாங்கம் விசாரித்து அறிந்த பின்னரே நாட்டுக்குள் இவர்களை அனுமதிப்பது குறித்து இனிமேல் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.