Tuesday, November 28, 2006

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களானோருக்கு ..

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களானோருக்கு சபையில் ஜெயானந்தமூர்த்தி எம்.பி. அஞ்சலி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சபையில் அஞ்சலி செலுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டக் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அஞ்சலி செலுத்திய ஜெயானந்தமூர்த்தி எம்.பி. பேசுகையில் கூறியதாவது: "தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று புனிதமான நாள். தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புலம்பெயர் இடங்களிலும் மாவீரர் நாளைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். எமது தேசியத் தலைவர் பிரபாகரன் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரையை நிகழ்த்தவுள்ளார். இந்த உரையை உலகம் முழுவதும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விடுதலைப்போராட்டத்தில் தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்காக இந்த சபையில் நான் அஞ்சலி செலுத்துகிறேன். போக்குவரத்து அமைச்சு தனது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள புத்தகத்தில் `தமிழ்க்கொலை' இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் பௌஸி கவனம் செலுத்த வேண்டும். அவர் தமிழ் பேசும் அமைச்சராகவிருக்கும் நிலையில் இவ்வாறான பிழைகள் இடம்பெறுவது மிகவும் கவலைக்குரியது. வாகரையில் டிப்போ தொடர்பில் அமைச்சர் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பழுதடைந்த பஸ்களே இங்கே சேவைகளில் ஈடுபடுகின்றன. அதேபோன்றே கிழக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளும் இடம்பெறுகின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பயணம் முடிந்த பின்னர் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலையேற்படுகின்றது. எனவே, கிழக்கு மாகாண போக்குவரத்துத்துறைகள் தொடர்பில் அமைச்சர் கூடிய கவனமெடுக்க வேண்டும்".