Sunday, November 26, 2006

இஸ்ரேல்- அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐ.நா. வாக்கெடுப்பில்

இஸ்ரேல்- அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐ.நா. வாக்கெடுப்பில் சிறிலங்கா பங்கேற்கவில்லை பலஸ்தீனத்தின் காசாப் பகுதியில் இஸ்ரேலிய இரானுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா குழுவினர் பங்கேற்கவில்லை. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான வாக்கெடுப்பானது கடந்த நவம்பர் 17 ஆம் நாள் நடைபெற்றது. காசாப் பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக 156 பேர் வாக்களித்தனர். அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா எதிராக வாக்களித்தன. 6 நாடுகள் பங்கேற்கவில்லை. அணிசேரா நாடுகள் முழுமையாக ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்தன. அதேபோல் தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் ஆதரித்தன. சிறிலங்கா குழுவினர் பங்கேற்காமையை கொழும்பில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இருப்பினும் சிறிலங்கா குழுவினர் பங்கேற்காமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. "பலஸ்தீன பிரச்சனையை சிறிலங்கா புரிந்து வைத்துள்ளது. அதனது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை" என்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நிலைப்பாட்டை ஜே.வி..பி. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அமெரிக்கா ஆதரவு நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்வதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சாடியுள்ளார். அண்மைக்காலமாக இரு ஐ.நா. தீர்மானங்கள் மீது அமெரிக்கச் சார்பு நிலையையே அரசாங்கம் மேற்கொண்டது. கியூபாவின் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் கண்டனத் தீர்மானம் மற்றும் வெனிசூலாவுக்கு எதிரான கௌதமலாவின் தீர்மானம் ஆகியவற்றில் அமெரிக்கச் சார்பு நிலையை அரசாங்கம் கடைபிடித்துள்ளது என்றார் விஜித ஹேரத். இணைத் தலைமை நாடுகள் நடைபெறும் நிலையில் சிறிலங்காவுக்கு பாரிய அழுத்தங்களும் கண்டனங்களும் தெரிவித்துவிடக்கூடாது என்பதற்காகவும் இஸ்ரேலின் இராணுவ உதவிக்காகவும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் மீது சிறிலங்கா பங்கேற்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றம்சாட்டியுள்ளனர். puthinam