மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு 15 முகவர் நிலையங்களுக்கு எதிராக வழக்கு [30 - November - 2006] வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 15 வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டவை என பணியகத்தின் உத்தியோகத்தொருவர் தெரிவித்துள்ளார். மோசடியான சான்றிதழ்களை பயன்படுத்தி பாடசாலை செல்லும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சித்தது, பல லட்ச ரூபாக்களை பெற்றுக் கொண்டு வேலை வாய்ப்புகளை வழங்காமை, நிர்ணயிக்கப்பட்ட வசதிகளின்றி பயிற்சி நிலையங்களை நடத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, அனுமதிப்பத்திரமின்றி முகவர் நிலையங்களை நடத்தி வருபவர்கள் தொடர்பான தகவல்களை பெற்று பொலிஸாருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் பணியகம் மேற்கொண்டு வருகிறது. கொரியாவுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி பல இலட்ச ரூபாக்களை பெற்றுக் கொண்டு அதற்கு அத்தாட்சியாக அச்சிடப்பட்ட கார்ட் ஒன்றை பல முகவர் நிலையங்கள் வழங்கியது தொடர்பாகவே பெருமளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்பட்ட அட்டைகளில் தொழில் அமைச்சினதும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினதும் முத்திரைகளும் காணப்பட்டுள்ளன.





