Monday, October 30, 2006

பெரும் மனித அவலம் உருவாகும் -ஜூலியன் வில்சன்.

ஏ 9 பாதை தொடர்ந்து மூடப்பட்டு இருந்தால் பெரும் மனித அவலம் உருவாகும் -ஜூலியன் வில்சன். யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் போக்குவரத்து தடைப்பட்டிருப்பதால் அங்கு அவசர உதவிகளைக் கொண்டு செல்ல முடியாமல் இருக்கிறது. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் பெரும் மனிதாபிமான நெருக்கடி உருவாகும். இவ்வாறு ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்திருக்கிறார். சிறி லங்காவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளைச் சீர்செய்வதற்காக ஐரோப்பிய ஆணைக்குழு 5 மில்லியன் யூரோ நிதி உதவியை வழங்க முன்வந்திருக்கிறது. இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்களைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தின் நிலைமை அதிக கவலையளிப்பதாகவுள்ளது.யாழ்ப்பாணத்திற்கு அவசியமாகத் தேவையாகவுள்ள பொருட்களைக் கொண்டுசெல்ல முடியாமலுள்ளது. அங்கு மனிதாபிமான அமைப்புகள் செல்வதே கடினமாகவுள்ளது. யாழ்ப்பாண மக்களுக்குப் பெரும் தேவைகள் உள்ளன. அவற்றைப் பூர்த்தி செய்வது மிகக் கடினமாகவுள்ளது. திறமையாக பணியாற்றும் அரசசார்பற்ற அமைப்புகள் சிறி லங்காவில் தமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனக் கருதுகின்றேன். அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அது என்னவென்று எங்களிடம் தெரியப்படுத்துங்கள். மூதூரில் அரச சார்பற்ற அமைப்பின் பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை முழு உலகும் உன்னிப்பாக அவதானிக்கின்றது. மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்கின்ற அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய தவணைக்கான மனிதாபிமான உதவிகளை சிறிலங்கா வழங்குகின்றோம். மனிதாபிமான உதவிகள் புதிதாகத் தேவைப்படுகின்றன ஐந்து மில்லியன் யூரோக்கள் வழங்கப்படுகின்றன. சிறி லங்காவில் நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக புதிதாக மனிதாபிமான உதவிகள் அவசியமாகவுள்ளன. தமிழ் நாட்டிற்கும் பெருமளவு மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். ஐரோப்பிய ஆணைக்குழு எவ்வித பாரபட்சமுமின்றி, இன, மத, வேறுபாடின்றி இந்த உதவிகளை வழங்குகின்றது. புதிதாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் எம்மைப்போல எதிர்காலக் கனவுகளைக் கொண்டவர்கள். அவர்களது கனவுகள் சிதைந்து போயுள்ளன. மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன. கடந்த 35 வருடங்களாக சிறி லங்காவில் பணியாற்றிவரும் அமைப்பு என்ற வகையில் கடந்த வருடத்திலிருந்து மனிதாபிமான செயற்பாட்டிற்கான இடம் குறைவடைந்து வருவதை உணர்கிறோம். மேலும், எமது சமூக அமைப்புகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. ஜனாதிபதி மனிதாபிமான அமைப்புகளின் பணியை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என உறுதியளித்தார். இது தொடர்பான முதலாவது கூட்டம் கடந்தவாரம் இடம்பெற்றது. எனினும், இந்த விடயத்தில் செய்துமுடிக்க பணிகள் இன்னமும் உள்ளன. ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான உதவித் திணைக்களம் மேலதிகமாக 5 மில்லியன் யூரோக்களை வழங்குகின்றது. சிறி லங்காவில் இடம்பெறும் மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கான மனிதாபிமான உதவியாகவே இது வழங்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து சிறி லங்காவில் பாதுகாப்பு நிலைவரம் மோசமடைந்துள்ளது. புதிதாக மோதல்கள் மூண்டுள்ளன் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இலங்கை 2000ஆம் ஆண்டு காணப்பட்ட நிலைக்குச் சென்றுவிட்டது. அக்காலப் பகுதியில் வருடமொன்றிற்கு 3,791 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புதிதாக மக்கள் இடம்பெயர்வதே கவலையளிக்கின்றது. 2006 ஏப்ரலுக்குப் பின்னர் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் சிறி லங்காவில் இடம்பெயர்ந்துள்ளனர். ஏற்கனவே, முன்னர் இடம்பெற்ற மோதல்களால் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்த நிலையிலுள்ளனர். மேலும், கடல்கோளால் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பலர் மீண்டும் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு 15 ஆயிரம் புதிய அகதிகள் சென்றுள்ளனர். அங்குள்ள அகதி முகாம்களில் 80 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். இவர்கள் குடிதண்ணீர், சுகாதார மற்றும் தங்குமிட நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். வடக்குகிழக்கின் பல பகுதிகளுக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட யோசனைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் 11ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணக்குடாநாட்டுக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்குமான வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அவசர உதவிகளை தரைமூலம் கொண்டுசெல்ல முடியாமலுள்ளது. தற்போதைய தட்டுப்பாடு தொடர்ந்தால் பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகும் என்று அவர் தெரிவித்தார்