புலிகள் களமுனையில் யுத்த டாக்கிகளைப் பயன்படுத்துகின்றனர் - ஐலன்ட் நாளிதழ் செக்கொஸ்லாவாக்கிய தயாரிப்பான T-55 நடுத்தர ரக யுத்த டாங்கியொன்று உட்பட, குறைந்தது மூன்று டாங்கிகளை களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதாக, படைத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பில் இருந்து வெளியாகும் (The Island) த ஐலண்ட் நாளேடு, தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றில் இரண்டு யுத்த டாங்கிகள் கடந்த 1993ஆம் ஆண்டு பூநகரியில் நிகழ்ந்த தவளைப் பாய்ச்சல் வலிந்த படையெடுப்பின் போதும், மற்றுமொரு யுத்த டாங்கி, கடந்த 1997ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற ஜெயசுக்குறு எதிர்ச்சமரின் போதும், சிறீலங்கா படைகளிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதாக த ஐலண்ட் நாளேடு குறிப்பிட்டுள்ளது. கடந்த 11ஆம் நாளன்று இடம்பெற்ற வடபோர்முனை சமரில், படையினருக்கு பலத்த ஆளணி - படைக்கல இழப்புக்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், சிறீலங்கா படைகளின் ஐந்தாவது கெமுனு வோட்ச் பற்றாலியன், முதலாவது விஜயபாகு காலாட்படை பற்றாலியன், ஆறாவது கஜபாகு பற்றாலியன் ஆகியவற்றை, மீள முடியாத அளவிற்கு செயலிழக்க வைத்ததோடு, RSF எனப்படும் பின்நிலை அதிரடி தாக்குதல் படையணியின், (Air Mobile Brigade) எயார் மொபைல் பிரிகேடிற்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியதாகவும், த ஐலண்ட் நாளேடு சுட்டிக் காட்டியுள்ளது. அத்துடன் வடபோர்முனை சமரில் சிறீலங்கா படைகளின் நான்கு T-55 ரக யுத்த டாங்கிகளையும், இரண்டு BMB ரக யுத்த துருப்புக் காவிகளையும் தாக்கி செயலிழக்க வைத்த தமிழீழ விடுதலைப் புலிகள், அவற்றில் மூன்றை களமுனையில் இருந்து அகற்றிக் கொண்டு சென்றதாகவும், த ஐலண்ட் நாளேடு குறிப்பிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் அகற்றிக் கொண்டு செல்லப்பட்ட மூன்று யுத்த கவச ஊர்திகளில், குறைந்தது ஒன்று மீளவும் இயங்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும், எதிர்காலச் சமர்களில் இதனை விடுதலைப் புலிகள் பயன்படுத்தலாம் என்றும், த ஐலண்ட் நாளேடு கவலை கலந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.





