Tuesday, October 31, 2006

வன்னியிலிருந்து 46 மீனவர் குருநகரரை சென்றடைந்தனர்.

கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சிறி லங்கா அரசு மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் மோதலின்போது குருநகர் கரைக்குத் திரும்பாது வன்னியில் தரித்துநின்ற குருநகர் கடற்றொழிலாளர்களில் சுமார் 46 மீனவர்கள் நேற்று அதிகாலை கடல் வழியூடாக வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டவாறு தமது கடற்கலங்களில் குருநகரை வந்தடைந்தனர். நேற்று காலை 6.30 மணியளவில் குருநகர் இறங்குதுறையில் இருந்து குடாக்கடலில் கல்லடி கடற்பகுதியை நோக்கி படையினர் அகோர எறிகணை மற்றும் துப்பாக்கி வேட்டுக்களை நடத்தினர். கரையோரத்தில் வசிக்கும் மக்கள் சிறீ லங்கா அரசு, தமிழீழ விடுதலைப்புலிகள் மோதல்கள் ஆரம்பித்து விட்டனவோ என அச்சமடைந்து காணப்பட்டனர். அச்சமயம் குடாக்கடலை நோக்கிய மக்கள், கடலில் பல படகுகள் வெள்ளைக் கொடிகளுடன் வந்துகொண்டிருப்பதை அவதானித்து குருநகர் இறங்குதுறைக்குச் சென்று படையினரிடம் எமது உறவினர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் வேட்டுக்களைத் தீர்க்கவேண்டாம் என அழுது புலம்பிக் கேட்டனர். அதனைத் தொடர்ந்து படையினர் வேட்டுக்களை இடைநிறுத்தினர். இதனிடையில் குருநகர் இறங்கு துறையை நோக்கிச்சென்ற குருநகர் கடற்றொழிலாளர் சங்கங்களின் இணையப்பிரதிநிதிகள் படையினரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீனவர்களின் படகுகளை குருநகர் இறங்குதுறைக்கு வர அனுமதித்தனர். பாலாவியில் இருந்துவந்தனர் 32 அடி இயந்திரப்படகு ஒன்று மற்றும் 14 பிளாஸ்ரிக் படகுகளுடனும் சுமார் 46 மீனவர்கள் வன்னியில் உள்ள பாலாவிப் பகுதியில் இருந்து புறப்பட்டனர். மீனவர்களின் வருகையை அறிந்து யாழ்.பேராலயபங்குத்தந்தை வண. பிதாமைக்கல் சௌந்தரநாயகம் அடிகளார், உதவிப் பங்குந்த தந்தை வண. பிதா பாலதாஸ் பிறாயன் அடிகளார், குருநகர் புனிதயாகப்பர் ஆலய உதவிப் பங்குத்தந்தை வண.பிதா எஸ். தயாகரன் அடிகளார், நெய்தலம் இயக்குநர் வண.பிதா அ.பி.ஜெயசேகரம் அடிகளார் ஆகியோர் குருநகர் இறங்கு துறைக்கு வருகைதந்திருந்தனர். கடல் வழியாக வருகை தந்த மீனவர்கள் வன்னியில் இருந்து தமது மீன்பிடிக் கலங்கள் மற்றும் தமது மீன்பிடி வலைகள் என்பவற்றைக் மீளவும் கொண்டுவந்ததுடன் அங்கு தாம் கொள்வனவு செய்த அரிசி, மா, சீனி, தேங்காய் ஆகியவற்றையும் கொண்டுவந்துள்ளார்கள். படையினரின் விசாரணையைத் தொடர்ந்து இம்மீனவர்கள் அனைவரும் குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் குருநகர் கடற்றொழிலாளர் சங்கப்பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரினதும் வாக்கு மூலங்களைப் பெற்று தம்மிடம் ஒப்படைப்பதுடன் அனைவரையும் மீளவும் தம்மிடம் நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு குருநகர் இறங்குதுறைக்கு அழைத்து வந்து மீனவர்களின் அடையாள அட்டைகளைப் பெற்றுச் செல்லுமாறு படையினர் கோரியதாக குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தச் சங்கத்தலைவர் அ.பிறேமேன் தெரிவித்தார். கரை திரும்பிய இம்மீனவர்கள் அனைவரும் நேற்றுக்காலை 11 மணியளவில் தமது உறவினர்களுடன் இணந்துகொண்டனர்.