கடந்த 10 மாத காலத்தில் 700 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் - சிறீலங்கா அரசாங்கம். வடபோர்முனை சமர், மாத்தளை தாக்குதல் ஆகியவற்றிற்கு முன்னரான பத்து மாத காலப் பகுதியில், எழுநூறுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கம், கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் நாள் முதல் இம் மாதம் 10ஆம் நாள் வரையான காலப் பகுதியில், எழுநூறுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்குப் பின்னர் கடந்த ஒக்ரோபர் மாதம் 11ஆம் நாள் நிகழ்ந்த வடபோர்முனை சமரில் நூற்று முப்பத்தெட்டு படையினரும், இதனை தொடர்ந்து கடந்த 16ஆம் நாள் மாத்தளையில் இடம்பெற்ற தாக்குதலில் நூற்றுப் பதினாறு படையினருமாக, கடந்த பதினொரு மாத காலப் பகுதியில் ஆயிரம் வரையான படையினர் கொல்லப்பட்டிருப்பதை சிறீலங்கா அரசாங்கம் உறுதி செய்துள்ளது. எனினும் கடந்த பதினொரு மாத காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகள், மற்றும் சுயாதீன வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் படி, கடந்த டிசம்பர் மாதம் முதல் ஓகஸ்ட் மாத இறுதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் மட்டும், குறைந்தது தொள்ளாயிரம் சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 11ஆம் நாளன்று நிகழ்ந்த வடபோர்முனை சமரில் இருநூறுக்கும் அதிகமான சிறீலங்கா படையினரும், மாத்தளை தாக்குதலில் நூற்றுப் பதினாறு கடற்படையினரும், காலி தக்சின துறைமுக தாக்குதலில் இருபத்தாறு கடற்படையினரும், நாளாந்தம் இடம்பெறும் ஏனைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐம்பது வரையான படையினருமாக, கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் மட்டும் நானூறு படையினர் பலியாகியுள்ளனர். ஆயிரம் வரையான படையினரின் உயிரிழப்புக்களுக்கு மட்டுமே சிறீலங்கா அரசாங்கம் உரிமை கோரியுள்ள போதும், கடந்த பதினொரு மாத காலப் பகுதியில், குறைந்தது ஆயிரத்து முந்நூறு படையினர் கொல்லப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.





