Wednesday, September 27, 2006

ஐக்கிய இலங்கைக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வே இந்தியாவின் எதிர்பார்ப்பு - மணிசங்கர் ஐயர் இலங்கை தனது ஐக்கியத்தையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென விரும்புவதாக குறிப்பிட்டுள்ள இந்தியாவின் பஞ்சாயத்து ஆட்சி விவகாரங்களுக்கான அமைச்சர் மணிசங்கர் ஐயர் இலங்கையின் ஐக்கியத்தை காப்பாற்றாத தீர்வு விரும்பத்தக்கதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். டபிள்யூ ஆர்.டி.பண்டார நாயக்காவின் 47 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகளில் கலந்து கொண்டபின்னர் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவுப் பேருரையை ஆற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவினை இந்தியாவின் தலைசிறந்த இராஜதந்திரிகளில் ஒருவர் என வர்ணித்த அமைச்சர், அவரின் உரையை மேற்கோள் காட்டி பேசினார். மணிசங்கர் ஐயர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது; இலங்கை என்றும் எமது இதயத்திற்கு நெருக்கமான நாடு. உங்களது முதலாவது சுதந்திர தினத்தன்று எமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விசேடமானவையாக விளங்குவதற்கான ஐந்து காரணங்களை முன்வைத்தார். இவையே எமது உறவுகளுக்கு அடிப்படையாக உள்ளன. எமக்கிடையே வேறு விதமான சிந்தனைகள் இருக்கலாம். அவ்வப்போது முறிவுகள் ஏற்படலாம் சகலவற்றிலும் எமக்கிடையே இணககப்பாடு இல்லாமல் போகலாம். எனினும், அடிப்படை கொள்கைகளில் எம்மிடையே எவ்வித வேறுபாடும் இல்லை. 2006 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சில அடிப்படை விடயங்களை தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். இலங்கையின் ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் இந்தியா உறுதியான அக்கறை கொண்டுள்ளது. இவை இலங்கை என்ற தேசத்தின் மிக முக்கியமான அடிப்படைகளாகும். இவை எவற்றையும் நாம் கைவிட மாட்டோம். இலங்கை தனது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை நாம் பாராட்டுகின்றோம். எனினும், நாங்கள் தீர்வுகளை திணிக்க விரும்பவில்லை. தேசிய இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகின்றோம். எனினும், இது இலகுவான விடயமல்ல. உங்களிடம் என்ன தீர்வு உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது. எனினும், எந்தத் தீர்வும் ஐக்கிய இலங்கைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா அங்கீகரிக்கின்றது. ஐக்கிய இலங்கைக்குள் காணப்படாத தீர்வு விரும்பத்தக்கதோ சாத்தியமாகக் கூடியதோ இல்லை. அதேவேளை, அதிகபட்ச அதிகார பகிர்வு விரும்பத்தக்கது. இந்தியா தனது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராகவுள்ளது. அதிகார பகிர்வு அனுபவங்கள் பற்றி இலங்கை அதிகாரிகள் என்னுடன் கருத்துப்பரிமாறுவதில் ஆர்வமாகவுள்ளதாக அறிகிறேன். ஜனாதிபதியுடனும் இதுபற்றி பேசவுள்ளேன். உயர்ஸ்தானிகர் ஒருவரின் உரையை அமைச்சர் ஒருவர் மேற்கோள் காட்டுவது வழமைக்கு மாறாக தோன்றலாம். இந்தியாவின் சிறந்த மூளைசாளிகளில் ஒருவர் நிருபமா ராவ். அற்புதமான இராஜதந்திரி, அவர் சீனாவிற்கு மிக முக்கியமான பணிக்காக அனுப்பப்படுகின்றார். இலங்கையில் முடக்கிவைப்பதற்கு பதில், இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மிக முக்கியமான இரண்டு நாடுகளில் ஒன்றான சீனாவிற்கு அவர் செல்கின்றார். மற்றைய நாடு பாகிஸ்தான். இலங்கை தனது ஐக்கியத்தை, பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளில் தோற்றுப்போகாது என எதிர்பார்க்கிறேன். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். பாரிய ஆசிய இலக்குகளை நோக்கி நாம் செல்லும் போது எமக்கு இலங்கை என்ற தோழன் அவசியம் என்றார்.