அவசர உதவிகள் மக்களைச் சென்றடைய அரசு புலிகளும் ஆவனசெய்ய வேண்டும் ஐ.நாவின் விசேட பிரதிநிதி வேண்டுகோள்
இலங்கையில் அண்மைக்காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசரகால மனிதாபிமானத் தேவைகளான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும் முடக்கப்பட்டுள்ளதாலும் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்தியாவசிய மனிதாபிமானப் பணிகள் மக்களைச் சென்றடைய மோதலில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரும் ஆவன செய்யவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் ஒருவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சுனாமி மீளமைப்பு மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்கான விசேட பிரதித் தூதுவர் எரிக் ஸ்ருவாட் நேற்று விடுத்த அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய அரசும் புலிகளும் தம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.மோதலைக் கைவிட்டு இரண்டு தரப்பினரும் பேச்சுக்குத் திரும்பவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2 மாதங்களில் மாத்திரம் சுமார் 200 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே இடப்பெயர்வுகளைச் சந்தித்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதையிட்டுத் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகிறார் என்றும் ஐ.நாவின் விசேட தூதர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த 2 மாதகால மோதல்கள் காரணமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் சுனாமி மீள்கட்டமைப்புப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதனால் உதவி வழங்கும் நாடுகள் சுனாமி மீள்கட்டமைப்பு பணிகளுக்கென வழங்க முன்வந்த முதலீடுகள் மற்றும் உதவித்தொகைகள் தற்போது பலத்த கேள்விகளுக்கு உள்ளாகியிருக்கின்றன எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
Saturday, September 30, 2006
Saturday, September 30, 2006





