Saturday, September 30, 2006

மக்கள் குடியிருப்பு மீதான விமானத் தாக்குதல்கள் போர் நிறுத்த மீறலே - ஜெயானந்தமூர்த்தி மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வாகரையில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற அகதி முகாங்களுக்கு அருகில் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதல் அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல் ஆகும். என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் இத்தாக்குதலை கண்டித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கடந்த சில மாதங்களாக இலங்கை விமானப்படையினர் மக்கள் குடியிருப்புகள் மீதும் அகதிகளாக வாழ்கின்ற பொதுகட்டடங்களுக்கு அருகிலும் தொடர்ச்சியான வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளார்கள். அத்துடன் மக்கள் குடியிருப்புகள் பல அழிவுற்றுள்ளது. இது போர் நிறுத்த மீறல் மாத்திரமல்லாது அடிப்படை மனித உரிமை மீறலுமாகும். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்பு மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும். பலர் கடத்தப்பட்டும் காணாமல் போவதற்கும் மகிந்தாவின் அரசாங்கமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். வாழைச்சேனை பகுதியில் மூன்று இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு சிறிலங்கா படையுடன் சேர்ந்து இயங்கும் துணை ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். இவ்வாறான படுகொலைகளை திட்டமிட்டு இந்த துணை ஆயுதக் குழுக்கள் மூலமாக மேற்கொண்டுவருகின்றனர். அத்துடன் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வவுணதீவு மற்றும் செங்கலடி பகுதியில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமாக ஆட்லறி தாக்குதலினால் ஆறு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளார்கள். இவ்வாறு பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை குறியாக வைத்து மேற்கொள்ளப்படும் விமான மற்றும் ஆட்லறி தாக்குதல்களை நிறுத்த வேண்டும். அத்துடன் வடகிழக்கு பகுதிகளில் இளைஞர்கள் வெள்ளை வேனில் கடத்தப்படுவது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.