Thursday, September 28, 2006

விபசார விடுதி விவகாரத்தால் சபையில் பெரும் சர்ச்சை ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் சகோதரியின் வீட்டிலேயே விபசார விடுதி இயங்கி வந்துள்ளது. இதனை ஊடகங்கள் வெளிப்படையாக தெரிவிக்காமையானது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் விடயமாகும் என்று ஐ.தே.க. வின் இரத்தினபுரி மாவட்ட எம்.பி. மகிந்த ரத்னதிலக்க சபையில் தெரிவித்தார். ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் சகோதரி என்று குறிப்பிடுவதானது பொதுவாக எல்லா அரசியற் கட்சித் தலைவர்களையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.மகிந்த இரத்னதிலக்க எம்.பி. யின் இந்த கருத்தினால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. தலங்கம பிரதேசத்தில் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்ட விபசார விடுதிகள் சோமவன்ச அமரசிங்கவின் சகோதரிக்கு சொந்தமானது என்று குறிப்பிட்ட மகிந்த ரத்னதிலக்க, ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளையும் அதன் உறுப்பினர்களையும் சாடிப் பேசினார். இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த விமல் வீரவன்ச எம்.பி. கூச்சல்களுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட ரீதியில் தாக்கிப் பேசினார். இந்தக் கருத்துக்கள் யாவும் சபாநாயகரினால் கன்சாட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டன.