யுத்தப் பிரதேசமாக காட்டி தரைவழிப் பாதையை திறக்க அரசு மறுப்பு - கூட்டமைப்பு தென்மராட்சியில் முகமாலை மற்றும் பளை பகுதிகளை நோக்கி தினமும் கடுமையான ஆட்லறி ஷெல்களையும் பல்குழல் ரொக்கட்டுகளையும் ஏவி அப்பகுதியை ஒரு யுத்தப் பிரதேசமாகக் காட்டுவதன் மூலம் யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை திறக்க அரசு மறுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செ. கஜேந்திரன் கூறுகையில்; பலாலி இராணுவத் தளத்திலிருந்தும் தென்மராட்சியின் வரணி 52-4 ஆவது படையணித் தலைமையகத்திலிருந்தும் தினமும் தொடர்ச்சியாக முகமாலை மற்றும் பளை பகுதிகளை நோக்கி கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடத்தப்படுகிறது. இதேபோன்று வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியிலும் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்க காவல் நிலைகள் தொடர்ந்தும் ஒரு யுத்தப் பிரதேசமாக இருப்பது போல் காட்டி குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை (ஏ-9) மூடி வைத்திருப்பதே இதன் நோக்கமாகும். படையினர் தொடர்ந்தும் யுத்த முனைப்பிலேயே உள்ளனர். யாழ்ப்பாணத்தில் அவர்கள் மேற்கொள்ளும் மோசமான தாக்குதல்களின் பின்னணியில் ஒரு நிகழ்ச்சித் திட்டமுள்ளது. சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக தாக்குதல்களையெல்லாம் நிறுத்தி சுமுகமானதொரு சூழ்நிலையை ஏற்படுத்துமாறு தொடர்ந்தும் சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்றபோது அரசு அதனை நிராகரித்து யுத்த முனைப்பிலுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





