Thursday, September 28, 2006

ஜே.வி.பியுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஐ.தே.க. திட்டம் அக்கட்சியுடன் பேச்சு நடத்த நால்வர் குழுவை நியமித்தார் ரணில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான உறவு மிகமோசமான நிலைக்குச் சென்றிருப்பதை அடுத்து, ஆளுந்தரப்பு மீது சீற்றமடைந்திருக்கும் ஜே.வி.பியினரைத் தம்பக்கம் வளைத்துக்கொண்டு அரசை ஆட்டங்காணச் செய்யும் முயற்சிகளில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது எதிக்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. ஜே.வி.பி. தலைவர்களோடு நேரடியாகப் பேச்சு நடத்துவதற்கும், ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவற்றின் நாடாளுமன்றப் பலத்தைச் சேர்த்துக்கொண்டு மாற்று அரசு ஒன்றை நிறுவும் வாய்ப்புகள் பற்றி ஆராய்வதற்கும் கட்சிப் பிரமுகர்கள் நால்வர் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேராவைத் தலைவராகக் கொண்ட இக்குழுவில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, தி.மகேஸ்வரன் மற்றும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் அடுத்த சில தினங்களில் ஜே.வி.பி. கட்சியின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்துவர் எனத் தெரிகின்றது. இதேவேளை மாற்று அரசு ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி ஜே.வி.பியுடன் ஐக்கிய தேசியக்கட்சி ஏற்கனவேபேச்சுக்களைத் தொடங்கிவிட்டது என்ற பரபரப்பான தகவல் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் நேற்று அடிபடத் தொடங்கியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான விரிசல்கள், ஜே.வி.பி. தலைவர்கள் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குறித்து வெளியிட்ட மோசமான விமர்சனங்களால் மேலும் அகன்று இருதரப்புகளுக்கும் இடையே பகைமை முற்றி வெடித்துப் போயுள்ளது. இந்த நிலைமையை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்து அதனை ஆட்டங்காணச் செய்யவும், சந்தர்ப்பம் வாய்த்தால் ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.காங்கிரஸ் என்பவற்றின் ஆதரவோடு ஆட்சி அமைப்பதற்கான முன்முயற்சிகளில் இறங்கிப் பார்க்கவும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிடுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த முற்சியின் முதல் நகர்வாகவே ரணில் விக்கிரமசிங்க நால்வர் குழுவை நியமித்து ஜே.வி.பியினருடன் பேச்சுக்களைத் தொடக்கியுள்ளார் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.