தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவிப்பு, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக, பிரித்தானிய (Welsh) வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொண்டு, எம்மிடம் கருத்துரைத்திருக்கும் வேல்ஸ் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (Highwell William) ஹைவெல் வில்லியம், சிங்கள அரசாங்கங்களின் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக, பல வருடங்களாக போராடி வரும் தமிழர்களுக்கு, வேல்ஸ் தேசியக் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் தமிழ் மக்களுடன், வேல்ஸ் தேசியக் கட்சி நல்லுறவைப் பேணி வருவதாக சுட்டிக் காட்டியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம், வான்வழிக் குண்டு வீச்சுக்கள் உட்பட, பல்வேறு வழிகளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவல நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொள்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன், சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆயுத உதவிகளையோ அன்றி தொழில்நுட்ப ஆலோசனைகளையோ, பிரித்தானியா வழங்கக் கூடாது என்பதில், வேல்ஸ் தேசியக் உறுதியாக இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசாங்கத்திற்கு படைத்துறை உதவிகளை பிரித்தானியா வழங்குவது, இயல்புநிலை தோன்றுவதற்கு வழிகோலப் போவதில்லை என சுட்டிக் காட்டியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம், பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதே சிறந்த வழி என்றும் கூறியுள்ளார்.





