Tuesday, August 29, 2006

புலிகளின் பதில் தாக்குதலால் இராணுவ நகர்வை இடைநிறுத்தியது சிறிலங்கா இராணுவம், திருகோணமலை மூதூரில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று இரண்டாவது நாளாக தமது வலிந்த தாக்குதலை தொடர்ந்த போதும் விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர எதிர்த்தாக்குதலையடுத்து நகர்வு நடவடிக்கையை இடைநிறுத்தினர். கடற்படை படகுகள் பீரங்கித் தாக்குதலை இன்று செவ்வாய்க்கிழமை காலை நடத்த இராணுவத்தினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு தமது வலிந்த தாக்குதலை தொடங்கினர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து இன்று காலையிலேயே இராணுவத்தினர் தமது நகர்வு முயற்சியை இடைநிறுத்தி விட்டனர். களநிலைமைகள் குறித்து விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியுள்ளதாவது:

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பகுதிகளை நோக்கி இன்றும் சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். சிறிலங்கா இராணுவ நடவடிக்கையைத் தொடருமேயானால் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதிருக்கும்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 36 நேர மணி நேரச் சமரில் 18 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா முன்னரங்க காவல்நிலைகளில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த 7 போராளிகள், இரணை இலுப்பைக்குளம் மற்றும் நொச்சிக்குளம் இடையே காணாமல் போயுள்ளனர் என்றார் இளந்திரையன்.

திருகோணமலை சமரில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 108 படையினர் படுகாயமடைந்தும் உள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் தெரிவித்திருந்தார்.