இருதரப்பின் ஒத்துழைப்பின்மையால் பணிகள் கடினமாகியுள்ளன கண்காணிப்புக்குழு கிளிநொச்சி பயணங்கள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் கிளிநொச்சி பயணங்கள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என கண்காணிப்புக்குழு தெரிவிக்கின்றன.மேலும் ஓமந்தையூடாக பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் எழுத்து மூலமான கோரிக்கையொன்று தமக்கு விடுக்கப்படவேண்டும் என்று விடுதலைப்புலிகளும் கண்காணிப்புக்குழுவிற்கு அறிவுறுத்தி உள்ளனர் என்றும் குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிடப்படும் வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமது கண்காணிப்புப் பணிகள் மிகுந்த கடினமானதாக மாறியுள்ளதாகவும்,சுதந்திரமாக அனைத்து இடங்களுக்கும் செல்ல விடாமல் கட்டுப்படுத்துவது குழுவின் செயற்பாட்டை முழுமையாக முன்னெடுக்க முடியாத நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளதுடன் இருதரப்பின் பூரண ஒத்துழைப்பின்மையும் குழுவின் செயற்பாடுகளை முடக்கியுள்ளது என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது. இதே நேரம் அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பையும் திருப்திப்படுத்துவதென்பது கண்காணிப்புக்குழுவிற்கு சாத்தியமில்லாத விடயம் என தற்போது குழுத்தலைவர் பதவியில் இருந்து விலகிச்செல்லும் தலைவர் உல்ப் ஹென்றிக்ஸன் கூறியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள ஹென்றிக்ஸன், அதாவது இரு தரப்பினதும் போர் நிறுத்த மீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து கண்காணிப்புக்குழு வரையறை செய்யும் சந்தர்ப்பங்களில் இரு தரப்பினதும் கடுமையான விமர்சனங்களை கண்காணிப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டியதாகவுள்ளது. ஆனால் இருதரப்பினதும் தவறுகளை மறைப்பது இலகுவாக செய்யக்கூடிய விடயமாகவுள்ளது என்றும் ஹென்றிக்ஸன் கூறியுள்ளார்.சட்ட விரோத கொலைகள் மற்றும் தாக்குதல்கள் என்பனவற்றிற்கும் இருதரப்பையுமே ஹென்றிக்ஸன் குற்றம் சாட்டியுள்ளார்.
Monday, August 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.