Sunday, August 27, 2006

ஏ9 பாதையை மீண்டும் திறக்க புலிகள் இணக்கம்; அரசு தயக்கம், யாழ். குடாநாட்டிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான தரை வழிப்பாதையான ஏ9 பாதையை மீளத் திறப்பதில் நெருக்கடிகளை அரசு எதிர்கொண்டுள்ளது. ஏ9 வீதியை திறந்து விடுவதில் விடுதலைப் புலிகளின் தரப்பில் சாதகமான சமிக்ஞைகள் காட்டப்பட்டுள்ளன என்றும் அரச தரப்பில் இவ்விடயம் தொடர்பில் தீர்க்கமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னரங்க நிலைப்பகுதிகளில் அண்மைய மோதல்களின் போது விடுதலைப் புலிகள் சொல்லிக் கொள்ளத்தக்க வெற்றி எதனையும் பெறவில்லையென்றே அரசு தரப்பில் கூறப்படுகின்றது.எனினும் முன்னரங்க நிலைப் பகுதியிலிருந்து கணிசமான அளவு தூரம் படையினர் பின்தள்ளப்பட்டுள்ள நிலையில் தரைவழிப் பாதையை திறப்பதற்கு முன்னதாக மீண்டும் பழைய நிலைகளை சென்றடைய வேண்டியதோர் சூழல் அரசிற்கு ஏற்பட்டுள்ளது. இதனையடிப்படையாக வைத்தே கடந்த வெள்ளி காலை இருமுனையிலான முன்னேற்ற நடவடிக்கையை படைத்தரப்பு முன்னெடுத்திருந்தது. எனினும் அம்முயற்சி சொல்லிக் கொள்ளத்தக்க அளவில் வெற்றியளிக்கவில்லை.புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட யுத்த சூனியப் பிரதேசத்தை தாண்டியே விடுதலைப் புலிகள் முன்னேற்ற நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போதைய புதிய நிலையில் புதிதாக இரு தரப்பினருக்கும் இடைப்பட்ட சூனியப் பிரதேசமொன்றினை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும் அவ்வாறானதோர் சூனியப் பிரதேசம் உருவாக்கப்படுவதை அரச படைகள் விரும்பவில்லை.மறுபுறத்தே ஒரேயொரு வழி, விடுதலைப் புலிகள் தமது பழைய நிலைக்கு திரும்பி, ஏற்கனவே அமுலில் இருந்த சூனியப் பிரதேசத்தை நடைமுறைப்படுத்துவதாகும். ஆயினும், விடுதலைப் புலிகள் அவ்வறானதோர் இணக்கப்பாட்டிற்கு வருவார்களா? என்பது சந்தேகமே.இந்நிலையிலேயே தனக்கான காலம் கனிந்து வரும் வரையிலும் இவ்விடயம் தொடர்பில் அமைதி காத்துக் கொள்ள அரசு முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.